
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாத இறுதியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே வந்தது. மகாராஷ்டிரா அரசியலில் 2023ம் ஆண்டில் இருந்து அடுத்தடுத்து வந்த மாற்றங்கள் காரணமாக இத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் இப்போது தேர்தல் நடத்துவதற்கு தடையாக இருந்த இட ஒதுக்கீடு பிரச்னை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்வு கண்டுள்ளது. இதையடுத்து மாநில தேர்தல் கமிஷன் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இத்தேர்தலில் வெற்றி பெற்று மும்பை மாநகராட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியை சிவசேனாதான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் 2023ம் ஆண்டு சிவசேனா இரண்டாக பிரிந்துவிட்டது. துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை அபகரித்துக்கொண்டார்.

இதனால் உத்தவ் தாக்கரே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இத்தோல்வியை தொடர்ந்து மும்பை மாநகராட்சி தேர்லில் எப்படியும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உத்தவ் தாக்கரேயும் இருக்கிறார். இதற்காக கடந்த 20 ஆண்டுகளாக எந்த வித அரசியல் தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் இருந்த தனது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயுடன் கூட்டணிக்கு உத்தவ் தாக்கரே தயாராகிவிட்டார்.
ராஜ் தாக்கரே கடந்த 2005ம் ஆண்டு உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக சிவசேனாவில் இருந்து விலகி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் அந்த கட்சியும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் ராஜ் தாக்கரேயும் மாநகராட்சி தேர்தலில் சரியான கூட்டணியை எதிர்பார்த்து காத்திருந்தார்.
அவர்களை ஒன்று சேர்க்கும் ஆயுதமாக இந்தி திணிப்பு பிரச்னை வந்தது. மகாராஷ்டிரா அரசு 5வது வகுப்பு வரை பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே வெளிப்படையாக அறிவித்தார். உடனே அதனை உத்தவ் தாக்கரேயும் ஏற்றுக்கொண்டார். இந்தி திணிப்புக்கு எதிராக மும்பையில் பேரணி நடத்த திட்டமிட்டனர்.
ஆனால் அதற்குள் இந்தி திணிப்பை மாநில அரசு கைவிட்டது. இதையடுத்து அதையே வெற்றி பொதுக்கூட்டமாக இருவரும் நடத்தினர். அதோடு மாநகராட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவித்தனர். உத்தவ் தாக்கரேயின் பிறந்த நாளுக்கு ராஜ் தாக்கரே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதே போன்று விநாயகர் சதுர்த்தியின் போது ராஜ் தாக்கரேயின் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த விநாயகரை உத்தவ் தாக்கரே நேரில் சென்று தரிசனம் செய்தார்.
இந்த சந்திப்புகள் அவர்களிடையேயான இடைவெளியை வெகுவாக குறைத்தது. தற்போது உத்தவ் தாக்கரே மீண்டும் ராஜ் தாக்கரே இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இச்சந்திப்பு குறித்து பேசிய உத்தவ் தாக்கரே, ”விநாயகர் சதுர்த்தியின் போது ராஜ் தாக்கரே வீட்டிற்கு சென்றபோது சித்தியிடம்(ராஜ் தாயார்) சரியாக பேச முடியவில்லை. வேறு ஒருநாள் வரும்படியும், சிறிது விரிவாக பேசலாம் என்று சித்தி சொல்லி இருந்தார். எனவேதான் அவரிடம் பேசுதற்காக வந்தேன்” என்று குறிப்பிட்டார்.
உத்தவ் தாக்கரே ஒவ்வோர் ஆண்டும் தசரா அன்று தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். அதனால் இந்த ஆண்டு நடக்க இருக்கும் கூட்டத்திற்கு ராஜ் தாக்கரேயையும் வரும்டி உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரேயுடன் அவரது கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவுத் எம்.பியும் சென்றார். அதனால் ராஜ் தாக்கரேயிடம் இரண்டு பேரும் கூட்டணி குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.