
‘திருச்செந்தூர் குடமுழுக்கு!’
திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்து முடிந்திருக்கிறது. குடமுழுக்கு முடிந்த பிறகு அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ‘திமுக அரசு ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும்!’ எனப் பேசியிருக்கிறார்.

‘சேகர் பாபு பத்திரிகையாளர் சந்திப்பு!’
சேகர் பாபு பேசியதாவது, ‘5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் குடமுழுக்கில் கலந்துகொண்டதாக காவல்துறையினர் புள்ளிவிவரத்தை கொடுத்திருக்கின்றனர். இன்னமும் பக்தர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். நிதீமன்றங்களின் தலையீடையெல்லாம் தாண்டி அரும்பாடு பட்டு குடமுழுக்கை நடத்தி முடித்திருக்கிறோம்.
வெளிநாட்டு பக்தர்களே வியக்கும் அளவுக்கு நிகழ்வை நடத்தி முடித்திருக்கிறோம். 14 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கை நடத்தவிருக்கிறோம். நாங்கள்தான் வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கை நடத்தினோம். முதியோர்கள் அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட உண்டு உறைவிட வசதியை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம்.

நாங்கள் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து 3289 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கை நடத்தியிருக்கிறோம். 6800 கோடி அளவுக்கு பணிகளைச் செய்திருக்கிறோம். 12 ஆண்டுகள் நிறைவுற்ற அத்தனை திருக்கோயில்களுக்கும் ஆகமவிதிப்படி குடமுழுக்கை நடத்துவதுதான் இந்த அரசின் நோக்கம். தமிழ்க்கடவுள் முருகனுக்கென்று தனி மாநாட்டை நடத்திக் காட்டிய பெருமை எங்களுக்கு உண்டு. முருகனை பலரும் சொந்தம் கொண்டாடுவதால் நாங்கள் முருகனுக்கு என்ன செய்திருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்கிறோம்.’ என்றார்.