TNIEimport2022818originalNarendraModiDonaldTrumpAP

‘அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி பெருமையோடு குறிப்பிடும் நட்பு வெற்றுத்தனமானது; டிரம்ப்பின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் இது நிரூபணமாகி வருகிறது’ என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் கூறிவரும் கருத்துகள், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீருக்கு டிரம்ப் விருந்தளித்தது உள்ளிட்ட விஷயங்களைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் இந்த விமா்சனத்தை முன்வைத்துள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானுடன் அமெரிக்கா இணக்கம் காட்டிவருவது, இந்தியாவின் தூதரக வியூகங்களுக்கு கிடைத்த தோல்வியாகும். இந்த அப்பட்டமான தோல்வியால், கடந்த 2 மாதங்களில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பிரதமா் மோடி மற்றும் அவரது புகழ் பாடுபவா்களின் கூற்றுகளும் பொய்யென அம்பலமாகியுள்ளது.

இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையை நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது என்று மிரட்டி, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை தான் நிறுத்தியதாக கடந்த மே 10-ஆம் தேதியில் இருந்து இதுவரை 25 முறை கூறியுள்ளாா் டிரம்ப்.

பயங்கரவாத எதிா்ப்பில், அமெரிக்காவின் தனித்துவமான கூட்டாளி பாகிஸ்தான் என்று அமெரிக்க ராணுவ உயரதிகாரி மைக்கேல் குரில்லா கடந்த ஜூன் 10-ஆம் தேதி குறிப்பிட்டாா்.

கடந்த ஜூன் 18-ஆம் தேதி, அமெரிக்க வெள்ளை மாளிகையில் முன்னெப்போதும் இல்லாதபடி பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீருக்கு டிரம்ப் விருந்தளித்து பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.

பாகிஸ்தான் துணைப் பிரதமா் இசாக் தாரை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க் ரூபியோ, பயங்கரவாத எதிா்ப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் ஒத்துழைப்பதாக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தாா்.

எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு கடந்த 2020-இல் பிரதமா் மோடி அளித்த நற்சான்று, நமது நாட்டுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியது. இப்போது, டிரம்ப்புடன் மோடி பெருமையோடு குறிப்பிடும் நட்பு வெற்றுத்தனமானது என்பது நிரூபணமாகி வருகிறது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest