
கோடம்பாகத்தின் பிஸியான நடிகர்களின் லிஸ்டில் முக்கிய இடத்தில் இருக்கிறார் நடிகர் நட்டி. அவர், அருண் பாண்டியனுடன் இணைந்து நடித்திருக்கும் `ரைட்’ படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இதைத் தாண்டி, ‘கருப்பு’ போன்ற கோலிவுட்டின் எதிர்பார்ப்பிற்குரிய படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

`ரைட்’ படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேசினோம். நிதானமாக சென்ற உரையாடல் அவருடைய கடந்த கால விஷயங்களையும் புரட்டியது…….
`ரைட்’ எப்படியான ஒரு திரைப்படமாக இருக்கும்?
சுவாரஸ்யமான த்ரில்லர் திரைப்படமாக இது இருக்கும். ஒரு சாமானிய மனிதனுக்கு பிரச்னை வந்தால் அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போவாரு. இந்தப் படத்தைப் பொறுத்தமட்டில் ஒரு ஸ்டேஷனுக்கு பிரச்னை வந்தால் என்ன ஆகும்ங்கிறதுதான் கதை. மறுபடியும், இந்தப் படத்திற்காக போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கேன். நான் நடிக்கிற ஒவ்வொரு போலீஸ் கதாபாத்திரமும் ஒவ்வொரு விஷயத்துல வேறுபட்டு நிற்கும். அந்த வகையில இதுவரைக்கும் நான் நடித்த போலீஸ் கேரக்டர்களில் இருந்து இது தனித்து நிற்கும். இந்தப் படத்தின் திரைக்கதையும் ரொம்ப முக்கியமான விஷயமாக பேசப்படும். படம் பார்த்து நீங்களும் அதைச் சொல்வீங்க.

அருண் பாண்டியனும் படத்தில் நடித்திருக்கிறாரே! உங்களுடைய ஆரம்பகால சினிமா நாட்களில் வெளிவந்த அவருடைய படங்களுக்கு நீங்கள் எவ்வளவு பெரிய ரசிகர்?
அருண் பாண்டியன் சாருக்கு இந்தப் படத்தின் கதை ரொம்ப பிடிச்சுதான் உள்ள வந்தாரு. அவரைப் பொறுத்த வரைக்கும் அவருக்கு ஒரு கதை பிடிச்சிருச்சுனா, அதில் கமர்ஷியல் விஷயங்கள் இருக்க வேண்டும் என எதையும் எதிர்பார்க்கமாட்டாரு. நான் அவருடைய படங்கள்ல அசிஸ்டன்ட்டாகவும் வேலை பார்த்திருக்கேன். தமிழ் சினிமாவுல பாடி பில்டிங் கலாசாரத்தை உருவாக்கியவர் இவர்தான். உதவி ஒளிப்பதிவாளர்களாக வேலைப் பார்க்கும் எங்களுக்கு பிற மொழி படங்களின் வி.எச்.எஸ் வாங்கித் தருவாரு. அதிலிருந்து நாங்க கத்துகிட்ட விஷயம், புரிஞ்ச விஷயத்தையும் கேட்டும் ஆரோக்கியமான உரையாடலை நிகழ்த்துவாரு.
ஒரு வருடத்திற்கு எத்தனை போலீஸ் கதாபாத்திரங்களில் உங்களை நடிக்கக் கேட்கிறாங்க?
நிறைய போலீஸ் கதாபாத்திரங்கள் வருதுங்க. ஆனா, ஒவ்வொரு கேரக்டரும் ஒன்றிலிருந்து வேறுபட்டிருக்கும். `கர்ணன்’ கண்ணபிரான் ரொம்ப கொடூரமான போலீஸ் கேரக்டர். `மகாராஜா’ வரதராஜன் கொஞ்சம் க்ரே ஷேட் கொண்டவர். இப்போ இந்தப் படத்திலும் வேறு மாதிரியான கதாபாத்திரம். ஒரு படத்தின் திரைக்கதைதான் கதாபாத்திரத்திற்கு எப்படியான நடிப்பைக் கொடுக்கணும்னு முடிவு பண்ணனும். அதற்கேற்ப ஒவ்வொரு போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வித்தியாசங்களை நானும் மேற்கொள்வேன். டெம்ப்ளேட் போலீஸ் கதாபாத்திரங்களாக எனக்குத் தொடர்ந்து வந்தால் போர் பீலிங் ஏற்படலாம். முன்னாடிலாம் போலீஸ் கதைகள் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனா, இப்போ போலீஸ் பத்தி வெவ்வேறு விஷயங்களை கதைகள் மூலம் சொல்றாங்க. எனக்கும் வித்தியாசமான கேரக்டர்கள் தொடர்ந்து வருது.

`துப்பாக்கி’ படத்திற்கு முன்பு வரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் உங்களை ஒளிப்பதிவாளராக ஏதாவது ஒரு படத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சித்தார் என கேள்விபட்டோம், அது உண்மையா?
`ரமணா’ படத்துல நான் முதல்ல கமிட்டாகிட்டேன். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் நான் வாங்கிட்டேன். அந்த சமயத்துல அனுராக் காஷ்யப் `ப்ளாக் ப்ரைடே’ படம் எடுக்கத் தொடங்கினார். அனுராகிற்கு என் உதவி தேவைப்பட்டது. அதுனால முருகதாஸ் சார்கிட்ட சொல்லிட்டு `ரமணா’ படத்துல இருந்து விலகி பாலிவுட் படத்துக்குப் போனேன். என்னுடைய நிலைமையையும் முருகதாஸ் சார் புரிஞ்சுகிட்டாரு. அதன் பிறகு, அவருடைய ஒவ்வொரு படத்துக்கும் ஒளிப்பதிவு செய்ய என்னை கேட்டாரு. ஆனா, சரியாக எதுவும் அமைந்து வரல. துப்பாக்கி’ படத்துல வெண்ணிலவே பாடலை மட்டும் நான் ஒளிப்பதிவு செய்தேன். அந்தப் படம் நடக்கும்போதே, `துப்பாக்கி’ இந்தி ரீமேக்கிற்கு நீங்கதான் கேமரா பண்ணனும்னு அவர் சொல்லிட்டாரு.
ஏ.ஐ மூலமாக `ராஞ்சனா’ படத்தின் க்ளைமேக்ஸ் மாற்றப்பட்டது குறித்து உங்களுடைய கருத்து?
நான் ரீ-ரிலீஸில் படத்தைப் பார்க்கல. ஆனா, க்ளைமேக்ஸ் காட்சியை ஏ.ஐ மூலமாக மாற்றியிருக்காங்கனு கேள்விப்பட்டேன். அதில் எனக்கு உடன்பாடில்ல. நாம் ஏற்கெனவே ஒரு விஷயத்தை செஞ்சிட்டோம். அந்தத் திரைப்படம் ஓடலைனா அந்தக் காரணத்திற்காக நீங்க க்ளைமேக்ஸ் காட்சியை மாற்றலாம். ஆனா, அந்த திரைப்படம் திரையரங்குகளில் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்பவும் அந்தப் படத்தைப் பற்றிப் பேசுறாங்க. படத்தின் உரிமையை வைத்து அவர்கள் அதை மாற்றும்போது க்ரியேட்டிவாக எங்களுக்கு அது பிடிக்கல.

`கருப்பு’ படம் எப்படி வந்திருக்கு? என்ன எதிர்பார்க்கலாம்?
படம் பயங்கரமா வந்துட்டு இருக்கு. ஆர். ஜே. பாலாஜி பயங்கரமா செதுக்கிட்டு இருக்காரு. நல்ல படமாக நிச்சயம் அது வெளிவரும்.