
ரஷியாவின் கம்சட்கா கிழக்கு கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷியாவின் கம்சட்கா பிராந்தியத்தில் இருந்து 128 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் வெள்ளிக்கிழமை காலை 12.28 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவானது. இதனைத் தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இவை ஒவ்வொன்றும் 5.8 ரிக்டர் அளவிலானவை என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கடற்கரையில் 30 முதல் 62 சென்டிமீட்டர் உயர ராட்சத அலை உருவாகக்கூடும் என்பதால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது உயிர் சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
1200-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவு
ரஷியாவின் கம்சட்கா இந்த ஆண்டின் நில அதிர்வு நடவடிக்கைகளின் மையமாக உள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவிலானவை (ரிக்டர் அளவில் 2.0 முதல் 4.0 வரை), ஆனால் ரிக்டர் அளவில் 4.0 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த பிராந்தியத்தில் 7.0 அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான 4 பெரிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
கம்சட்காவில் 2025 ஜூலை 30 இல் மிகவும் பேரழிவு தரக்கூடிய நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆகப் பதிவாகியிருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான நிலநடுக்கங்களில் மிகப்பெரிய அதிர்வாகும். இது பல நாடுகளை பாதித்தது. இந்த நிலநடுக்கம் கடல் பகுதியில் ஏற்பட்டதால் அதிக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதன் பின்னர், ஆகஸ்ட் 3 ஆம் தேதி, கம்சட்காவின் குரில் தீவுகளுக்கு அருகே 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையில், செப்டம்பர் 13 ஆம் தேதி, கம்சட்காவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்குப் பிறகு இங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.