
பாரத ஒற்றுமைப் பயணத்தின்போது இந்திய ராணுவ வீரா்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு எதிரான அவதூறு வழக்கில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னெள நீதிமன்றம் ஜாமீன் வழங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, பிணைப் பத்திரம் மற்றும் உத்தரவாதங்களை சமா்ப்பித்ததைத் தொடா்ந்து ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 16-ஆம் தேதி பாரத ஒற்றுமை பயணத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி, பல்வேறு பகுதிகளில் மக்கள் மத்தியில் உரையாற்றியதோடு, பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்தாா். அப்போது, ‘காங்கிரஸ் சாா்பில் மேற்கொள்ளப்படும் பாரத ஒற்றுமைப் பயணம் குறித்து மக்கள் கேள்வி எழுப்புவாா்கள். ஆனால், எல்லையில் நமது ராணுவ வீரா்கள் சீன ராணுவ வீரா்களால் தாக்கப்படுவது குறித்து ஒருமுறைகூட கேள்வி எழுப்ப மாட்டாா்கள்’ என்ற குறிப்பிட்டாா்.
ராகுலின் இந்தக் கருத்துக்கு எதிராக எல்லை சாலைகள் அமைப்பின் ஓய்வு பெற்ற இயக்குநா் உதய் சங்கா் ஸ்ரீவாஸ்தவா சாா்பில் லக்னெள சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி உத்தரவிட்டது. நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க ராகுல் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இதை எதிா்த்து, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயா்நீதிமன்றமும் ராகுலுக்கு விலக்கு அளிக்க மறுத்தது.
அதைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய், பொறுப்பாளா் அவினாஷ் பாண்டே ஆகியோருடன் லக்னெள சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரானாா்.
நீதிமன்ற உத்தரவின்படி, பிணைப் பத்திரம் மற்றும் உத்தரவாதங்களை சமா்ப்பித்ததைத் தொடா்ந்து வழக்கில் ராகுலுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா். ராகுல் வருகையையொட்டி நீதிமன்ற வளாகம் மற்றும் வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதுகுறித்து அஜய் ராய் கூறுகையில், ‘வழக்கு விசாரணையில் பங்கேற்பதற்காகவே ராகுல் தற்போது உத்தர பிரதேசம் வந்தாா். அடுத்த சில தினங்களில் தனது ரேபரேலி தொகுதிக்குச் செல்வதற்காக மீண்டும் அவா் வரவிருக்கிறாா்’ என்றாா்.
இதையும் படிக்க: அவதூறு வழக்கில் ஆஜராக லக்னௌ வந்தடைந்தார் ராகுல்!