
திருப்பூர் புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமையுடன் உடல் ரீதியாக, மன ரீதியாக கொடுத்த டார்ச்சரால் இந்த துயர முடிவை அவர் எடுத்ததாக ஆடியோ வெளியிட்டு கூறியிருந்தார்.

இதுதொடர்பாக ரிதன்யா கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி செந்தில் குமாரை சந்தித்து வழக்கு விசாரணை தெய்வாக இருப்பதாக புகார் கூறியுள்ளார்.
பிறகு அண்ணாதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இதை சாதாரண தற்கொலை வழக்கு, கொடுமை வழக்காக பதிவு செய்துள்ளனர். சரியான பிரிவுகளை இணைத்து குற்றவாளிகளுக்கு தண்டணை வாங்கி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஐ.ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்னும் பரிசோதனை அறிக்கைக்கள் வரவில்லை என்று காவல்துறையினர் கூறுகிறார்கள். விசாரணை அதிகாரி மேல் சந்தேகம் ஏற்படுகிறது. அதனால் அவரை மாற்ற வேண்டும். இந்த வழக்குக்கு தனி விசாரணை அதிகாரி வேண்டும்.
முக்கியமாக வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். லேப் ரிப்போர்ட், ஆடியோ ரிப்போர்ட் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆடியோ ஆதாரங்கள் இருந்தும் உரிய சட்ட பிரிவுகளில் கொண்டு வரவில்லை. நான் பேச்சாளர் இல்லை. என் மகளை இழந்த வலியில் பேசினேன்.

சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை பகிர்வது வருத்தமளிக்கிறது” என்றார்.
அண்ணாதுரையின் வழக்கறிஞர் குப்புராஜ் கூறும்போது, “இந்த வழக்கில் பெண்கள் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை சேர்க்கப்படவில்லை. காவல்துறையினர் கால தாமதம் செய்யும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.” என்றார்.