
ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ரோஹித் தண்ட்ரியால் மனு தாக்கல் செய்தார். ரூ.50 பணத்தாள்களில் தொட்டுணரக்கூடிய குறிப்பான்கள் இல்லை. மற்ற பணத்தாள்களைப் போன்று, ரூ.50 தாள்களை அடையாளம் காணுவது பார்வைக் குறைபாடு உடையர்களுக்கு கடினமாக உள்ளது என்று மனுவில் ரோஹித் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2022 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட கணக்கெடுப்புகளை விவரிக்கையில், நாணயங்களின் எடை, அளவு, தனித்துவம் இல்லாத காரணத்தால், அவற்றை பெரும்பாலான பயனர்கள் தவிர்க்கின்றனர். ஆனால், இவையெல்லாம்தான் பணத்தாள்களை அன்றாட பயன்பாட்டுக்கு மிகவும் நடைமுறைப்படுத்தும் காரணிகள் என்று மத்திய அமைச்சகம் குறிப்பிட்டதாகக் கூறினர்.
தொடர்ந்து, ரூ.10, ரூ.20 போன்ற நாணயங்களைவிட தாள்களுக்குத்தான் பரவலான மக்கள் முன்னுரிமை அளிப்பதாகவும், தற்போது ரூ.50 நாணயத்தை அறிமுகப்படுத்தும் எந்தத் திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்தது.
இதனையடுத்து, ரிசர்வ் வங்கியின் பிரமாணப் பத்திரத்தை மறுஆய்வு செய்து, பதிலளிக்க வழக்குரைஞர் ரோஹித்துக்கு கால அவகாசம் அளித்ததுடன், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிக்க: ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?