
நாட்டில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் லலித் மோடியின் சகோதரர் சமீர் மோடி வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக பெறப்பட்ட பாலியல் வன்கொடுமை புகாரைத் தொடர்ந்து, தில்லி விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஐபிஎல் மோசடியில் குற்றச்சாட்டில் தொடர்புடைய தொழிலதிபர் லலித் மோடி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, நாட்டைவிட்டு வெளியேறி பிரிட்டனில் வசித்து வருகிறார்.
இவரது சகோதரர் சமீர் மோடி, இந்தியாவில் மோடிகேர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், சமீர் மோடிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகாரை தில்லி காவல்துறையிடம் பெண் ஒருவர் கடந்த வாரம் அளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரில், ” திருமணம் செய்து கொள்வதாக போலி வாக்குறுதி அளித்து கடந்த 2019 முதல் 2024 வரை சமீர் மோடி தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார். தற்போது தன்னை ஏமாற்றியதுடன் மர்ம நபர்கள் மூலம் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கிறார். சிலர் தன்னை அச்சுறுத்தும் வகையில் பின் தொடர்கின்றனர்.“ எனத் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வெளிநாட்டில் இருந்து தில்லி திரும்பிய சமீர் மோடியை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
ஏற்கெனவே, தனது தாயுடனான வாரிசு உரிமை தகராறு காரணமாக தில்லி காவல்துறையிடம் கடந்தாண்டு சமீர் மோடி பாதுகாப்பு கோரியது பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சமீர் மோடியின் தந்தை கே.கே. மோடி மறைவுக்குப் பிறகு குடும்பத்தின் சொத்துப் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாயின் மீது சமீர் மோடி வழக்கு தொடர்ந்தார்.