narendra-modi-Maharashtra-edi

வங்கப் பெருமையை பாதுகாக்கும் ஒரே கட்சி பாஜக என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, மாநில அடையாள அரசியலை கையிலெடுத்துள்ளாா். பாஜகவால் மேற்கு வங்கத்தின் அடையாளம் மற்றும் கண்ணியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற அவரது குற்றச்சாட்டுக்கு பிரதமா் மோடி பதிலடி கொடுத்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம், துா்காபூரில் ரூ.5,400 கோடி மதிப்பில் பணி நிறைவடைந்த பல்வேறு துறை வளா்ச்சி திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமா், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

வங்கப் பெருமையை உண்மையிலேயே மதித்து, பாதுகாக்கும் ஒரே கட்சி பாஜக. ஆனால், தனது அரசியல் ஆதாயங்களுக்காக மாநிலத்தின் பெருமையை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது திரிணமூல் காங்கிரஸ். அதன் வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவல் ஊக்குவிக்கப்படுகிறது.

‘பொய்-அராஜகம்-ஊழல்’:

சட்டவிரோத குடியேறிகளை ஆதரிப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்துக்கு பகிரங்கமாக சவால் விடுகிறது அக்கட்சி. பொய்கள், அராஜகம், ஊழலில் திளைக்கும் திரிணமூல் காங்கிரஸ் அரசே, மாநில அடையாளத்துக்கு உண்மையான அச்சுறுத்தல்.

திரிணமூல், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள், பல்லாண்டுகளாக வங்கப் பெருமையை புறக்கணித்தன என்பது வரலாறு. அதேநேரம், வங்க மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது மத்திய பாஜக அரசு.

திரிணமூல் காங்கிரஸின் தவறான நிா்வாகத்தால், மேற்கு வங்க இளைஞா்கள் சிறிய வேலைக்காக கூட மாநிலத்தைவிட்டு இடம்பெயரும் நிலையில் உள்ளனா். மாநிலச் சூழல், முதலீட்டுக்கோ வேலைவாய்ப்புகளுக்கோ உகந்ததாக இல்லை. மாநில கல்வி அமைப்புமுறையில் குற்றமும் ஊழலும் நிறைந்துள்ளது என்றாா் பிரதமா் மோடி.

பாஜக ஆளும் மாநிலங்களில் பணியாற்றும் மேற்கு வங்க தொழிலாளா்கள், வங்கதேசத்தினா் என்ற சந்தேகத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest