புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பூட்டிய வாடகை வீட்டிற்குள் 35 வயது ஆணின் அரை அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இறந்தவா் நியூ உஸ்மான்பூரில் வசிக்கும் முகமது இத்ரிஷ் என அடையாளம் காணப்பட்டது. பூட்டிய வளாகத்தில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக பிற்பகலில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு குழு சம்பவ இடத்தை அடைந்தது. வீட்டிற்குள் நுழைந்தபோது, தரையில் அரை அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்தது.
உடற் கூறாய்வுக்காக உடல் ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.