
இனி, வந்தே பாரத் ரயில், ஒரு ரயில் நிலையத்தை அடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புகூட, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்களில் காலியாக இருக்கும் இருக்கைகளைப் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு ரயில் புறப்படுவதற்கு முன்பு வரை மட்டுமே அதில் பயணிக்க டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது, ஒரு ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டுவிட்டது. அது சேலம் – ஈரோடு – திருப்பூர் வழியாக கோவை வரும் என்றால், இந்த ரயில் நிலையங்களிலிருந்து பயணிக்க விரும்புவோம், ரயில் புறப்பட்ட பிறகு, அதிலிருக்கும் காலி இருக்கைகளைப் பார்த்து 15 நிமிடத்துக்கு முன்புகூட முன்பதிவு செய்து பயணிக்கலாம். அது போல, ஒருவர் சென்னையிலிருந்து ஈரோடு வரை மட்டுமே பயணிக்கிறார். இப்போது மற்றொருவர் ஈரோடு அல்லது திருப்பூரிலிருந்து கோவை செல்ல கடைசி 15 நிமிடத்துக்கு முன்பு கூட அந்த காலி இருக்கையை முன்பதிவு செய்து அதில் பயணிக்கலாம். இதனால், வந்தே பாரத் ரயில் காலி இருக்கைகளுடன் செயல்பது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வசதி ஜூலை 17ஆம் தேதி முதலே நடைமுறைக்கு வந்திருக்கிறது. தெற்கு ரயில்வே ஏற்படுத்தியிருக்கும் இந்த கரண்ட் புக்கிங் முறைப்படி, ஒரு ரயில் புறப்பட வேண்டிய ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பிறகும்கூட, ரயிலில் இருக்கும் காலி இருக்கைகளின் நிலவரத்தைப் பார்த்து அதனை கரண்ட் புக்கிங் முறையில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
அதாவது, ஒரு ரயில் காலை 9 மணிக்கு திருச்சியை வந்தடையும் என்றால், அந்த ரயிலில் ஏறும் பயணிகள், வந்தே பாரத் ரயிலின் காலி இருக்கை வசதியைப் பொறுத்து, காலை 8:45 மணி வரை ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் விரைவு ரயிலில் இருக்கும் அனைத்து இருக்கைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக, தெற்கு ரயில்வே இதுபோன்ற புதிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு ரயில் நிலையத்துக்கு வந்தே பாரத் ரயில் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை பயணிகள் ரயில் நிலையங்களிலிருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது, கடைசி நேரத்தில் ரயில் நிலையம் வந்து டிக்கெட் எடுக்கும் நபர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மண்டல ரயில்வேயால் இயக்கப்படும் எட்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வியாழக்கிழமை முதல் புதிய முறை அமலுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வந்தே பாரத்’ ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிஷங்களுக்கு முன்பு இருக்கைகள் காலியிடம் குறித்து ஐஆர்சிடிசி முன்பதிவு செயலி அல்லது இணையதளத்தில் தெரிவிக்கப்படும். அதில் தேவைப்படுவோர் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
எந்தெந்த ரயில்களில் இந்த வசதி!
தெற்கு ரயில்வே இயக்கும் வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும்.
1. மங்களூரு சென்ட்ரல்- திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் (எண் 20631)
2. திருவனந்தபுரம் சென்ட்ரல்-மங்களூரு சென்ட்ரல் ரயில் (எண் 20632)
3. சென்னை எழும்பூா்- நாகா்கோவில் ரயில் (எண் 20627)
4. நாகா்கோவில்- சென்னை எழும்பூா் (எண் 206628)
5. கோவை – பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் (எண் 20642
6. மங்களூரு சென்ட்ரல்- மட்கான் ரயில் (எண் 20646)
7. மதுரை- பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் (20671)
8. டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல்- விஜயவாடா ரயில் (எண் 20677)
என 8 வந்தே பாரத் ரயில்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் சொல்வது என்ன?
பெரும்பாலான வந்தே பாரத் ரயில்களின் இருக்கைகள் பொதுவாக நிரம்பியே இருக்கும். எப்போதாவதுதான் இருக்கைகள் காலியாக இருக்கும். அதிலும், கேரளம் வழியாகச் செல்லும் ரயில்கள் எல்லாம் முழுக்க முழுக்க நிரம்பிதான் இருக்கும் என்பதால், அவசரத்துக்கு வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இது ஓரளவுக்குத்தான் உதவும் என்றும் கூறப்படுகிறது.