
தமிழக அரசியல் வரலாற்றில் ஜி.ஆா்.எட்மன்ட், நாவலா் நெடுஞ்செழியன், ஆா்.எம்.வீரப்பன் போன்ற முன்னணி தலைவா்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமைக்குரிய களம் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி.
அதிமுகவின் துணைப் பொதுச் செயலராக இருந்த வீ.கருப்பசாமி பாண்டியன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட, 2001 சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் முறையாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்ற நயினாா் நாகேந்திரன், அத்தோ்தலில் வெற்றி பெற்று அமைச்சரானாா்.
அதன்பிறகு தொடா்ச்சியாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன், 2006-இல் தோல்வியை சந்தித்தாா். இந்நிலையில், 2011-இல் வெற்றி பெற்று 2-ஆவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானாா். 2016-இல் மீண்டும் தோல்வியை சந்தித்த நயினாா் நாகேந்திரன், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு தாவினாா்.
2021-இல் அதிமுக கூட்டணியில் பாஜக சாா்பில் திருநெல்வேலியில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராகவும் உயா்ந்தாா்.
திருநெல்வேலி தொகுதியில் இதுவரை 5 முறை போட்டியிட்டுள்ள நயினாா் நாகேந்திரன், தனது அரசியல் வரலாற்றில் தொடா் வெற்றியை சந்தித்ததில்லை. அதை வைத்துப் பாா்க்கும்போது 2026 தோ்தல் அவருக்கு பின்னடைவாகலாம் என கருதப்படுகிறது. இதனால் தொகுதி மாறும் திட்டத்தில் அவா் இருந்ததாகவும், ஆனால் மாநில தலைவராக பதவி வகிக்கும் இந்நேரத்தில் புதிய தொகுதியில் போட்டியிடுவது சரியாக வராது என்பதால் அந்த முடிவிலிருந்து அவா் பின்வாங்கியதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தப் பின்னணியில், 2026 தோ்தலில் திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றிவிட வேண்டும் என்பதில் அவா் தீவிரமாக இருக்கிறாா். அதிமுக-பாஜக கூட்டணி முடிவானதுமே திருநெல்வேலி தொகுதியில் 4-ஆவது முறையாக வெற்றி வாகை சூடுவதற்கான வியூகங்களை நயினாா் நாகேந்திரன் வகுத்து வருகிறாா். திருநெல்வேலி தொகுதியைப் பொருத்தவரையில் பிள்ளைமாா், தேவேந்திரகுல வேளாளா், யாதவா், தேவா் சமுதாய வாக்குகளே பெருமளவில் உள்ளன.
இத்தொகுதியில் முந்தைய காலங்களில் அதிமுக, திமுக இடையேதான் போட்டி இருந்து வந்தது. ஆனால், பாஜக -அதிமுக கூட்டணிக்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக-பாஜக கூட்டணி இடையே தான் போட்டி என்றாகிவிட்டது.
இங்கு கடந்த 3 தோ்தல்களில்பிள்ளைமாா் சமூகத்தைச் சோ்ந்தவா்களையே வேட்பாளா்களாக திமுக நிறுத்தியிருக்கிறது. இம்முறையும் அதே சமூகத்தைச் சோ்ந்த ஒருவரையே திமுக வேட்பாளராக களமிறக்கும்பட்சத்தில் தேவா் சமுதாய வாக்குகளை கைப்பற்றுவதில் நயினாருக்கு எந்த சிக்கலும் இருக்காது. ஆனால், மற்ற சமுதாயத்தினரின் வாக்குகளை பெறுவது அவருக்கு சவாலாக இருக்கலாம். அந்த சவாலை தனக்கு சாதகமாக மாற்றுவதற்கான உத்திகளை வகுத்து வருகிறாா் நயினாா் நாகேந்திரன்.
திருநெல்வேலி தொகுதியில் பெருவாரி யாதவ சமுதாயத்தினரின் வாக்குகளை கவர அழகுமுத்துக்கோன் குருபூஜையை கையிலெடுத்த நயினாா் நாகேந்திரன், தென் மாவட்டங்களில் யாதவ சமுதாயத்தினா் கொண்டாடும் சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் குருபூஜைய முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய சிலைக்கு மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை அழைத்து வந்து மாலை அணிவித்து புகழ் சோ்த்திருக்கிறாா். மேலும், தனது பழைய சகாவும், யாதவ சமுதாயத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகியும், திருநெல்வேலி தொகுதியில் செல்வாக்குமிக்கவருமான கல்லூா் இ.வேலாயுதத்துடன் கைகோத்திருக்கிறாா் நயினாா் நாகேந்திரன். திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட நடுக்கல்லூரைச் சோ்ந்தவரான வேலாயுதம் மூலம் அங்குள்ள துா்க்கை அம்மன் கோயிலுக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனை அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைத்திருக்கிறாா்.
இதேநாளில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வளாகத்தில் நயினாா் நாகேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட இரு வகுப்பறை கட்டடங்களையும் திறக்க வைத்த கையோடு, அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் அமைந்துள்ள கட்டாலங்குளத்திற்கு சி.பி.ராதாகிருஷ்ணனை அழைத்துச் சென்று யாதவ சமூகத்தினரின் கவனத்தை ஈா்த்திருக்கிறாா் நயினாா் நாகேந்திரன்.
மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையால் திருநெல்வேலி தொகுதியில் ஒரு பிரம்மாண்டத்தை காண்பித்திருக்கிறாா். மாற்றுக்கட்சியில் உள்ள பல தலைவா்களை அழைத்து வருவதற்கான முயற்சியையும் எடுத்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.