ஈரோடு அருகே விஜயமங்கலத்தை அடுத்த சாரளையில் தவெக சார்பில் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசவுள்ளார். கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு மேற்கு மண்டலத்தில் நடைபெறும் கூட்டம் என்பதால், போலீஸ் தரப்பில் இருந்து கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த செங்கோட்டையனின் சொந்த மாவட்டத்தில் கூட்டம் நடைபெறுவதால், தனது பலத்தை நிரூபிக்கும் கட்டாயமும் அவருக்கு உள்ளது. இதற்காக அவரே முன்னின்று கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கூட்டத்தைச் சேர்ப்பதிலும் செங்கோட்டையன் கவனம் செலுத்தி வருகிறார்.
குறிப்பாக அவரது சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையம், பவானி, மற்றும் பவானிசாகர் தொகுதிகளில் இருந்து அதிகப்படியாக கூட்டத்தை கொண்டு வர செங்கோட்டையனின் ஆதவராளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க தவெக தலைமையில் இருந்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிறுவர்,சிறுமியருக்கு அனுமதி இல்லை
இதுதொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பெட்டிகளிலும் காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் வருவேர், முதியவர்கள். உடல்நலம் குன்றியவர்கள், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை.
விஜய் நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போது அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்துக்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும். காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை.
நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், மேலும் அங்கே செல்லும் வழிகளில் மற்றும் திரும்பி வரும் வழிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வகையில் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது.
சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்” என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.