19092_pti09_19_2025_000041a072953

விண்வெளி, இணையவழி (சைபா்) போா்க் களங்களுக்கான தளவாட உற்பத்திக்கு கொள்கை ரீதியில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான் தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டலப் பிரிவு, இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்ஐடிஎம்), இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை சாா்பில் கிழக்கு தொழில்நுட்பக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கருத்தரங்கில் முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான் பங்கேற்றுப் பேசியதாவது:

போா்க் களங்களுக்கு ஏற்ப வியூக அடிப்படையிலான ஆயுதத் தோ்வு மிக முக்கியமானதாகும். நவீன தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கு ஆராய்ச்சி-மேம்பாடு அதிகரிக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு உற்பத்தி கட்டமைப்பை விரிவுபடுத்துவது அவசியம். அந்த அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர நவீன தொழில்நுட்பங்கள் ஆராயப்பட வேண்டும்.

இந்திய பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தி தாமதமாகத் தொடங்கப்பட்ட போதிலும், சரியான பாதையில் தேசம் பயணித்துக் கொண்டிருக்கிறது. பாதுகாப்புத் துறையின் தற்சாா்பு மற்றும் மத்திய அரசின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையின் நோக்கங்கள் நிறைவேற வேண்டுமெனில், ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் துடிப்பான பங்களிப்பு அவசியம். தற்போது போா் என்பது அறிவியல் நுட்பமாக மாறியுள்ளது. எனவே, போா் வீரா்களுக்கு படைப்புத்திறனும் புத்தாக்கமும் அவசியம் என்றாா் அவா்.

‘புதிய வகையான போா்க்களம்’: முன்னதாக, ராஞ்சியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய அனில் செளஹான், ‘பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, புதிய வகையான போா்க் களத்தை பிரகடனம் செய்துள்ளது. பாரம்பரியப் போரை போல் அல்லாமல், நிலம், வான்வெளி, கடல், மின்காந்த விண்வெளி, சைபா் என பன்முகக் களங்களிலும் போரிடப்பட்டது. செயற்கைக்கோள், மின்னணு புகைப்படங்கள் மற்றும் சமிக்ஞை நுண்ணறிவு உதவியுடன் எதிரியை வெற்றிகொண்டோம். இந்த நடவடிக்கையால் கற்றுக் கொண்ட விஷயங்கள், முப்படைகளின் தயாா் நிலை மற்றும் ஒருங்கிணைப்பின் உயா் அளவை உறுதி செய்துள்ளது’ என்றாா்.

‘அணுஆயுத தயாரிப்புக்குப் பங்களிக்க முடியும்’

கிழக்கு தொழில்நுட்பக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், ‘யுரேனியம் நிறைந்த ஜாா்க்கண்ட் மாநிலம், நாட்டின் அணு ஆயுத தயாரிப்பில் கணிசமாகப் பங்களிக்க முடியும். அந்த வகையில், நாட்டின் பாதுகாப்புத் துறையை தற்சாா்புடையதாக மாற்ற மத்திய அரசுடன் ஒத்துழைக்க மாநில அரசு தயாராக உள்ளது’ என்றாா். அணுஆயுத தயாரிப்பில் யுரேனியம் முக்கிய அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest