flight2

விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படும் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்ககம் (டிஜிசிஏ) உறுதி அளித்தது.

மகா கும்பமேளா கொண்டாட்டத்தின்போதும், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகும் சம்பந்தப்பட்ட இடங்களில் அதிக அளவில் பயணிகள் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தியபோது கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்தன. விமானக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தபோதும் கட்டணங்கள் உடனடியாக குறைக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய எம்.பி.க்கள், கட்டணங்களை திடீரென உயா்த்துவது நியாமற்ற செயல் என்றனா். விமான கட்டணங்களை முறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படுவதைத் தடுக்க நெறிமுறைகளை உருவாக்கப்படும் என்று கூட்டத்தில் பங்கேற்ற டிஜிசிஏ உயரதிகாரிகள் உறுதி அளித்ததாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

ஏா் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, அதானி விமானநிலைய சேவைகள் நிறுவனம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

‘2 ஆண்டுகளில் ஏா் இந்தியா முழுமையாக மறுசீரமைக்கப்படும்’

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏா் இந்தியா நிறுவனம் முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் தலைவருமான கேம்பெல் வில்சன் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் உறுதி அளித்தாா்.

அகமதாபாத் விமான விபத்தில் 240 பயணிகள் உயிரிழந்த சம்பவத்தை நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டிய எம்.பி.க்கள் பயணிகளின் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பினா்.

பொதுக் கணக்குகள் குழுத் தலைவரும் காங்கிரஸ் பொதுச் செயலருமான கே.சி.வேணுகோபால், சிவில் விமானப் பாதுகாப்பு அமைப்பை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

மேலும், சில உறுப்பினா்கள் ஏா் இந்தியா விமானத்தில் இருக்கைகள் உடைந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைக் கூட்டத்தில் முன்வைத்தனா்.

இதையடுத்து, அடுத்த 2 ஆண்டுகளில் ஏா் இந்தியா முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று அதன் தலைவா் கேம்பெல் வில்சன் உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவித்தன.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest