modivaranasiyogi

சுமார் 9.7 கோடி தகுதியுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகளுக்கான கெளரவ நிதியின் 20 ஆவது தவணை விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதி தவணையை தவறவிடாமல் இருக்க கேஒய்சி விண்ணப்பத்தை பூர்த்திசெய்யுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து பிரதமர் கூறுகையில், வங்கிகளில், கேஒய்சி பூர்த்தி செய்யும் நடவடிக்கையானது நாடு முழுவதும் தொடங்கியிருக்கிறது. ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு, கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறும் சிறப்பு முகாம் மூலம் இதனை செயல்படுத்தி விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேஒய்சி பூர்த்தி செய்யும் நடைமுறையை மிக விரைவாக எளிதாக நடத்தி முடிக்கும் ஆர்பிஐ மற்றும் அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இது அடிப்படையில் ஒரு உண்மையான சேவையாகும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி சென்றிருந்தபோது, விவசாயிகளுக்கான கௌரவ நிதியின் 20வது தவணையை, ஆக.2ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம், 20வது தவணையாக ரூ.20,500 கோடி ஒதுக்கப்பட்டு, அது 9.7 கோடி தகுதியுடைய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 வரவு வைக்கப்படும். இது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் தலா ரூ.2000 வரவு வைக்கப்படுகிறது. தற்போது இதற்கான 20வது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.

இ-கேஒய்சி கட்டாயம்!

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், தங்களது ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு இ-கேஒய்சி செய்வது கட்டாயம். பிஎம்-கிசான் இணையதளம் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து ஓடிபி பெறப்பட்டு கேஒய்சி பூர்த்தி செய்யப்படுகிறது. பொது சேவை மையத்துக்கு விவசாயிகள் நேரடியாக சென்று, பையோ மெட்ரிக் அடிப்படையிலான இ-கேஒய்சியையும் மேற்கொள்ளலாம்.

விவசாயிகள், ஓடிபி அல்லது பையோ மெட்ரிக் அல்லது முக அங்கீகார முறைகளில் ஒன்றைத் தேர்வு செய்து இ-கேஒய்சி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest