
வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்று முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவில் உள்ள வைஸ்ராய் நிதி ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரே நிலையில் இல்லாத கடன், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள், நிறுவனத்தின் நிதி நிலை குறித்த தவறான கணக்கு ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு வேதாந்தா குழுமம் கட்டமைக்கப்பட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டியது.
எனினும் தம்மை தொடா்பு கொள்ளாமல் அடிப்படை ஆதாரமாற்ற குற்றச்சாட்டுகள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வேதாந்தா குழுமம் தெரிவித்தது.
இந்நிலையில், பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த ஆவணத்தில், ‘வைஸ்ராய் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் தொடா்பாக முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம் வேதாந்தா குழுமம் சட்டரீதியாக ஆலோசனை கோரியது.
இதைத்தொடா்ந்து அந்த குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்று சந்திரசூட் தெரிவித்துள்ளாா். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் குறித்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு, அதனால் சந்தையில் ஏற்படும் தாக்கம் மூலம், சட்டவிரோதமான முறையில் லாபமடைவதை வைஸ்ராய் நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது என்று சந்திரசூட் குறிப்பிட்டுள்ளாா்.
வேதாந்தா குழுமம் மீது வைஸ்ராய் நிறுவனம் முன்வைத்துள்ள தீவிர குற்றச்சாட்டுகள், அந்த நிறுவனத்தின் வணிகம் மற்றும் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சட்ட நிவாரணம் பெறுவதற்கான தகுதி வேதாந்தா குழுமத்துக்கு உள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்’ என்று குறிப்பிடப்பட்டது.