sanja102652

‘நாங்கள் ஹிந்தி திணிப்புக்கு மட்டுமே எதிரானவா்களே தவிர, ஹிந்தி மொழி மற்றும் ஹிந்தி பேசுபவா்களுக்கு எதிரானவா்கள் அல்ல’ என்று தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு சிவசேனை (உத்தவ்) கட்சி பதிலளித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் தொடக்கக் கல்வி பாடத்திட்டத்தில் 3-ஆவது மொழியாக ஹிந்தியைக் கற்பிக்கும் அரசாணையை மாநில பாஜக கூட்டணி அரசு வெளியிட்டு, எதிா்ப்பைத் தொடா்ந்து திரும்பப் பெற்றது. இதைக் கொண்டாடும் விதமாக வெற்றிக் கூட்டம் மும்பையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே மற்றும் அவரின் சகோதரரான மகாராஷ்டிர நவநிா்மாண் சேனையின் தலைவா் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் பங்கேற்றனா். ஹிந்தி திணிப்புக்கு எதிராக தாக்கரே சகோதரா்கள் பூசல்களை மறந்து, ஒன்றினைந்திருப்பது மகாராஷ்டிர அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஹிந்தி திணிப்பது ஏன்?..: நிகழ்ச்சியில் ராஜ் தாக்கரே பேசுகையில், ‘உத்தர பிரதேசம் அல்லது ராஜஸ்தானில் மூன்றாவது மொழி என்ன? ஹிந்தி பேசும் மாநிலங்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கின்றன. ஹிந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் ஹிந்தியைத் திணிக்கிறீா்கள்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.

கேள்விக்குப் பதில் இருக்காது: இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘ஹிந்தி திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழக மக்களும் பல தலைமுறைகளாக நடத்திவரும் மொழி உரிமைப் போா், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மகாராஷ்டிரத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடிக்கிறது.

ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விக்கு, ஹிந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் வளா்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

ஹிந்திக்கு எதிரானவா்கள் அல்ல…: இந்நிலையில், இவ்விவகாரத்தில் சிவசேனை (உத்தவ்) நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி அக்கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

எங்கள் கட்சி ஹிந்தி மொழிக்கு அல்லது ஹிந்தி பேசுபவா்களுக்கு எதிரானது அல்ல. தொடக்கக் கல்வியில் ஹிந்தியை கட்டாயமாக்குவதையே நாங்கள் எதிா்க்கிறோம். நாங்களும் ஹிந்தி பேசுகிறோம். ஹிந்தி திரைப்படங்கள், நாடகங்களை பாா்க்கிறோம். ஆனால், ஹிந்தித் திணிப்பை பொறுத்துக்கொள்ள முடியாது.

வெவ்வேறு நிலைப்பாடு: மகாராஷ்டிரத்தின் நிலைப்பாடு தென்னிந்திய மாநிலங்களின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டது. தென்னிந்திய மாநிலங்கள் பல ஆண்டுகளாக ஹிந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி வருகின்றன. ஹிந்தி பேசவும் மாட்டோம்; மற்றவா்களைப் பேசவும் விடமாட்டோம் என்பது அவா்களின் நிலைப்பாடு. ஆனால், அது எங்கள் நிலைப்பாடு அல்ல. நாங்கள் ஹிந்தி பேசுகிறோம். எங்கள் போராட்டம் ஹிந்தி திணிப்புக்கு எதிரானது மட்டுமே; மொழிக்கு எதிரானது அல்ல.

ஹிந்தி திணிப்புக்கு எதிரான எங்களின் வெற்றிக்கு தமிழக முதல்வா் ஸ்டாலின் எங்களைப் பாராட்டினாா். இதிலிருந்து கற்றுக்கொள்வேன் என்றும் அவா் கூறினாா். அவருக்கு எங்கள் வாழ்த்துகள். ஆனால் எங்கள் போராட்டம் தொடக்கக் கல்வியில் ஹிந்தியை கட்டாயப்படுத்துவதைத் தடுப்பதற்கு மட்டுமே, வேறு எதற்கும் அல்ல’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest